Friday, September 29, 2023
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை
Thursday, September 28, 2023
கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்
கிளிநொச்சியில் நேற்று(27) வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் நுழைந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் நேற்று(27) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழுவினர் தாக்கிய போது சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டிலுள்ள ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக கூறி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்
இந்நிலையில், குறித்த குழுவினர் இளைஞனின் கால் பகுதியில் வெட்டியதாகவும், இதனைத் தடுத்த பெண்ணையும் தாக்கியதாகவும் காவலதுறையினருக்க அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 20இற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து அவ்வீட்டில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோல் குண்டு வீசப்பட்டது
அத்துடன் வீட்டில் இருந்த சிசிரீவி , மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கிய பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தாக்குதலின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தாக்குதல் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களுக்க முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சந்தேகம்
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இரணைமடு குளத்தின் கீழ் இடம்பெறுகின்ற சட்டவிரோத மண்ணகழ்வைத் தடுப்பதற்கு குறித்த குடும்பம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மண் மாபியாக்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி 10.7 கோடிக்கு விற்பனை!
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு (இந்திய மதிப்பு) விற்பனையாகியுள்ளது.
அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சார்பியல் கொள்கையை 1905 ஆம் ஆண்டிலும், பொது சார்பியல் கொள்கையை 1915 ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டார்.இவற்றைக் குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929 ஆண்டு பெப்ரவரி 3 இல் வெளியானது.
ஏல விற்பனையில் 10.7 கோடி
தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப் 28 இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.
மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம் இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
Wednesday, September 27, 2023
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சமாகியது..
நாட்டுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (26) ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையுடன் பத்து இலட்சமாக அதிகரித்தது.
ரஷ்ய பிரஜை ஒருவரும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். ரஷ்யாவிலிருந்து ஓமானுக்கு வந்த அவர்கள், பின்னர் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கேக் வெட்டி, மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.
2023: இதுவரை 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 46 பேர் பலி
ஆறு வயது சிறுமியும் உள்ளடக்கம்; பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு
இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம்,தென் மாகாணத்திலேயே அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவங்களில் 35 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது