Column Left

Vettri

Breaking News

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை




பாறுக் ஷிஹான்

கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை தெளிவுபடுத்தியுள்ளது.

 விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகளான தா.பிரதீபன், மு.பிரகாஷ், நாகராஜா சனாதனன் மற்றும் சி.திலோஜன் ஆகியோர் கலந்துகொண்டு இத் தெளிவூட்டலை வழங்கினர்.

கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட 9 இஸ்லாமிய பெண் சுகாதார பணி உதவியாளர்கள் தமது கலாச்சார ஆடையுடன் கடமையேற்க வந்திருந்தனர். இதன்போது, அரச நிர்வகிப்பு மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவான சீருடையையே அணிய வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன், ஆரம்பக் கட்டமாக அன்றைய தினம் அதே ஆடையுடன் கடமையாற்ற அனுமதித்தது.

சுற்றுநிரூபத்தின்படியான சீருடையை அணிந்து வருவதாகக் கூறி அவகாசம் பெற்றிருந்த போதிலும், கடந்த 10 ஆம் திகதி 5 பேர் மீண்டும் சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன் வருகை தந்தனர். இதனை அனுமதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்த நிலையிலேயே, வெளியே உள்ள சிலர் இச்சம்பவத்திற்கு இனவாத முத்திரை குத்தி போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ் இளைஞர் சேனை சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் 2019.06.26 திகதிய 13/2019(1) மற்றும் 2022.09.27 திகதிய 05/2022 ஆகிய சுற்றறிக்கைகள் 2022.11.28 ஆம் திகதி அரசாங்கத்தினால் முற்றாக இரத்துச் செய்யப்பட்டு விட்டன.

தற்போது 1989.02.01 ஆம் திகதிய 8/89 இலக்க அரச சுற்றுநிரூபம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே வைத்தியசாலை நிர்வாகம் சட்டப்பூர்வமாகச் செயற்பட்டுள்ளது.

தேவையற்ற இன முரண்பாடுகளைத் தவிர்க்க கோரிக்கை:

பாதிக்கப்பட்டதாகக் கருதும் தரப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ள நிலையில், இச்சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் தேவையற்ற இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர்.

பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு கலவரத்தைத் தூண்ட முற்படும் நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ் இளைஞர் சேனை, இனவாதக் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக விரைவில் பொலிஸ் நிலையங்களில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

No comments

Subscribe Us