Column Left

Vettri

Breaking News

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு விழா - 6 நாட்கள் பெருவிழா; உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் வருகிறார்!




 இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு விழா - 6 நாட்கள்  பெருவிழா;

உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர்  ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் வருகிறார்!

( வி.ரி.சகாதேவராஜா)





 இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் எதிர்வரும் நவம்பர் 12 முதல் 17 வரை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நூற்றாண்டு விழா தொடர்பாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் விளக்கமளித்தார்.

நவம்பர் 12 ஆம் திகதி 
மாலை 4.30 மணிக்கு கல்லடி மணிக்கூண்டு கோபுரச் சந்தியில் இருந்து பக்தர்கள், குருகுல பழைய மாணவர்கள், ஆலய அறங்காவலர்கள் மற்றும் மாணவர்கள் புடைசூழ ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமம் வரை பொது வரவேற்பு ஊர்வலம் நடைபெறும்.

நவம்பர் 13 -ஆம் திகதி 
காலை 8.30 மணிக்கு விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கும், காலை 9.30 மணிக்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இளைஞர் தின நிகழ்வும் நடைபெறவுள்ளது.

நவம்பர் 14 ஆம் திகதி 
ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் காலை 5.15 மணி முதல் மங்கள ஆரத்தி, வேத பாராயணம், கொடியேற்றம், பூஜை, பஜனை, நூற்றாண்டு நினைவுச் சின்னம் திறப்பு, ஹோமம், சொற்பொழிவு என பகல் 12.30 வரை விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெறும். மாலை 7 மணிக்கு பக்தர்கள் ஆசி பெறலாம்.

நவம்பர் 15 ஆம் திகதி சிறப்பு  பிரதான விழா
கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும். 
இதில் மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், நூற்றாண்டு அறிக்கை, காணொளி, தலைமையுரை, நூற்றாண்டு மலர், முத்திரை, புத்தகங்கள் வெளியீடு மற்றும் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களின் ஆசியுரை இடம்பெறும்.

 நவம்பர் 
16ஆம் திகதி சிவானந்தா வித்தியாலயத்தில் விஞ்ஞானானந்த பவன் திறப்பு, 17ஆம் திகதி மந்திர தீட்சை நிகழ்வு ராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறும்.

அதேவேளை நவம்பர் 20 ஆம் திகதி 
கொட்டக்கலை சிவானந்தா நலன்புரி நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நிகழ்வுகளிலும் பக்தர்கள் கலந்து ஆசி பெறுமாறு பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Subscribe Us