சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலைய நீச்சல் தடாகம் விரைவில் திறப்பு: துரிதகதியில் மறுசீரமைப்புப் பணிகள்!!!
(மஜீட். ARM)
சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் பல மாதங்களாகச் செயலற்றுக் கிடந்த நிலையில், அதனை மீண்டும் இயங்கச் செய்யும் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
குறித்த நீச்சல் தடாகம் நீண்ட காலமாக மூடப்பட்டுக் கிடப்பது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கப்பட்டு, ஏராளமான பதிவுகள் இடப்பட்டிருந்தன.
இத்தகைய தொடர்ச்சியான அவதானிப்புகளும் பொதுமக்களின் கோரிக்கைகளும் உரிய தரப்பினரின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்பட்டன.
பொதுச் சொத்துக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தனியார் ஒருவருக்குச் சொந்தமானதாக இருப்பின் உடனடியாகத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றாலும், இது சம்மாந்துறை பிரதேச சபையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், அதற்கரிய சட்ட விதிகள் மற்றும் முறைசார் அணுகுமுறைகளைக் கையாண்டே தீர்வுகளைப் பெற வேண்டியுள்ளது.
இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு, பிரதேச சபையின் கீழ் உள்ள நடைமுறைச் சவால்களைத் தாண்டி, கௌரவ தவிசாளர் அவர்கள் இதில் உடனடிக் கவனம் செலுத்தியுள்ளார்.
அவரின் துரித நடவடிக்கையின் பலனாகவே தற்போது நீச்சல் தடாகத்தை மீள இயங்க வைப்பதற்கான திருத்தப் பணிகள் மற்றும் பூர்வாங்க முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
விரைவில் இப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்களும் இளைஞர்களும் பொதுமக்கள் பலரும் பயன்பெறும் வகையில் நீச்சல் தடாகம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments