Column Left

Vettri

Breaking News

நிரந்தரமாக சேவையாற்றிய எங்களை மேலதிகம் என்று கூறி திருமலைக்கு இடமாற்றுவது பழிவாங்கலாகும்! ஆதம்பாவா எம்பியிடம் அம்பாறை - மட்டு. அலுவலர்கள் முறைப்பாடு!




நிரந்தரமாக சேவையாற்றிய எங்களை மேலதிகம் என்று கூறி திருமலைக்கு இடமாற்றுவது பழிவாங்கலாகும்! ஆதம்பாவா எம்பியிடம் அம்பாறை - மட்டு. அலுவலர்கள் முறைப்பாடு! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக நிரந்தரமாக சேவையாற்றிய எங்களை "மேலதிகம்" என்று கூறி இந்த வயதில் திருமலைக்கு இடமாற்றுவது பழிவாங்கலாகும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அ. ஆதம்பாவாவிடம் பாதிக்கப்பட்ட அம்பாறை - மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேரில் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறைப்படி பரீட்சை மூலம் நியமனம் பெற்று ஆளணிக்கேற்ப கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நிரந்தரமாக பணியாற்றி வரும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திருகோணமலைக்கு இடமாற்றும் உத்தரவு ஒன்று நேற்று கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் இடமாற்ற விதிகளை மீறி தாங்கள் இடமாற்றப்பட்டுள்ளதாக 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலையுடன் மன உளைச்சலுக்கு மத்தியில் முறைப்பாட்டை கூறியுள்ளனர். இவ் இடமாற்றம் 2026 ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது தற்போதைய பணியிடங்களிலிருந்து புதிய பணியிடங்களுக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட உள்ளனர். புதிய பணியிடங்களில் கடமையை ஏற்கத் தவறினால், அது சேவை ஒழுங்கு விதிகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுடனான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு அவரது மாளிகைக்காடு அலுவலகத்தில் நடைபெற்றது. அவர்கள் அங்கு தமது மகஜரை கையளித்து கூறுகையில் . நாம் முறைப்படி ஆளணிக்கேற்ப நியமிக்கப்பட்டவர்கள். மேலதிக ஆளணி என்று நாம் நியமிக்கப்படவில்லை.நாம் நிரந்தரமானவர்கள். தற்போது மட்டும் நாம் எப்படி "மேலதிகம்" என்ற வகுதிக்குள் பிரித்து பார்ப்பது? 5 வருடங்கள் கிழக்கில் இன்னும் பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றார்கள். அவர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத நிருவாகம், எங்களை மட்டும் மேலதிகம் என்று கூறி 46-56 வயதுடைய குடும்பஸ்தர்களான எங்களை இன்றைய பொருளாதார இறுக்கம் நிறைந்த காலகட்டத்தில் திருகோணமலைக்கு இடமாற்றுவது என்பது பொருத்தமல்ல. அரச இடமாற்றம் வழமையானதுதான். ஆனால் எமது விடயத்தில் மனிதாபிமானம் இடமாற்ற நடைமுறை விதிகள் என்பன மீறப்பட்டுள்ளன. இதேவேளை புதிதாக நியமனம் பெற்ற ஒருசிலர் 3 வருடங்களுள்ளே செல்வாக்கு காரணமாக சொந்த இடங்களில் இடமாற்றம் பெற்று வந்துள்ளனர். இவர்கள் பற்றி நிருவாகம் ஏன் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது. எமது மனைவிகள் இங்குள்ள திணைக்களங்களில் பணியாற்றும் அதேவேளை பிள்ளைகள் குடும்பம் இங்கு இருக்கின்ற போது எங்களை அங்கு அனுப்புவது மனிதாபிமானமா? ரித்வா பேரிடரிலும் பணியாற்றிய எங்களை திருமலைக்கு இடமாற்றுவதை தவிர்த்து அவரவர் இடங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். என்று கூறியுள்ளனர். இது விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தில் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

No comments