ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை !
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைந்துள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான பாதை மண்சரிவில் சிக்கி அபாய நிலையில் உள்ளது. இது தொடர்பாக பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அறிவித்தும் பயனில்லை என அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.அரச நிறுவனங்கள் அமுல்படுத்தும் வழமையான வேலைத்திட்டங்களுக்கு தனது பெயரை வைக்க முந்தியடிக்கும் அரசியல்வாதிகள் இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முன்வராமை அவர்களின் இயலாமையை காட்டுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
பாடசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பெண்கள் மதரஸா, கலாச்சார மண்டபம், பள்ளிவாசல், பொது விளையாட்டு மைதானம், பல்வேறு அரச காரியாலயங்கள், முக்கிய திணைக்களங்கள், பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு ஆகியன உள்ள இந்த பிரதேசத்தின் பிரதான பாதை முற்றாக சிதைவடைந்து பாவனைக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இதனை சீரமைக்க பல்வேறு அரச காரியாலயங்களை மக்கள் நாடியும் இதுவரை பொருத்தமான தீர்வு கிட்டவில்லை.
இந்த பிரச்சனையை உடனடியாக கவனத்தில் கொண்டு தீர்வை பெற்றுத் தருமாறு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஏ. ஆதம்பாவா அவர்களிடமும், உரிய அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.
No comments