தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) அதிகாலை 23 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 'குஷ்' (Kush) மற்றும் 'ஹசீஷ்' (Hashish) போதைப்பொருள் தொகுதியைக் இலங்கைக்குக் கொண்டு வந்த இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
இவ்வாறு கைதானவர் இந்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள் தொகையை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போதே, விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பனியகத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபரான இவர், இன்று அதிகாலை 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனையிட்ட போது, புளி டொபிகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 4 தகரப் பெட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 102 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மேலும் 6 டொபி பொதிகளில் இருந்து 5 கிலோ 260 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் போதைப்பொருள் தொகையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தடுப்புக் காவல் உத்தரவைப் பெற காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பனியகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது

No comments