வெருகல் நாதன் ஓடை ஆற்றில் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட கூடாது ..!
வெருகல் நாதன் ஓடை ஆற்றில் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட கூடாது ..!
(சேனையூர் நிருபர்)
அத்தம தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம், வெருகல் பகுதியில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்பட்ட நாதன் ஓடை ஆற்றினை மண் இட்டு நிரப்பும் செயற்பாடு கடந்த சனிக்கிழமை (31) கடற்படையினர், நீர்ப்பாசன திணைக்களத்தினர், பொது மக்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் நல்ல ஒரு விடயம் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (04) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த காலங்களில் குறிப்பாக நாதன் ஓடை ஆற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்தது இதனால்தான் இப்பிரதேசம் வெள்ள அனர்த்தத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் மக்கள் இடம் பெயர்ந்து நிர்க்கதிக்கு உள்ளாகும் அவல நிலை ஏற்ப்படுகின்றது.
எனவே மணல் அகழ்வதற்கு இப்பகுதியில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட கூடாது என்பதுடன் இயற்கையின் சமநிலைக்கும் மக்களின் வாழ்வுக்கும் அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
நாதன் ஓடை ஆற்றினை மண் இட்டு நிரப்பும் செயற்பாடு நிரத்தர தீர்வு அல்ல ஆகவே உறுதியான அனை அமைக்கப்பட்டு அப்பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் செயற்றிட்டம் ஏற்படுத்த வெருகல் பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சின்னமோகன்.

No comments