புத்தளத்தில் பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான முழுநாள் பயிற்சி
புத்தளத்தில் பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான முழுநாள் பயிற்சி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளத்தில் பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் டிஜிட்டல் அறிவையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முழுநாள் பயிற்சிப் பட்டறை செவ்வாய்க்கிழமை (03)புத்தளம் கிரேன்ட் மல்ஹாஸ் (GRAND MALHARS) மண்டபத்தில் நடைபெற்றது.
'Digital Equity SL: AI Literacy' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், வளவாளராகக் கலந்துகொண்ட Dr. சஞ்சனா ஹட்டோட்டுவ, 'New Trends, Tips and Techniques in AI' (செயற்கை நுண்ணறிவில் புதிய போக்குகள், பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் நுட்பங்கள்) எனும் தலைப்பில் விரிவான பயிற்சியை வழங்கினார்.
தெற்காசிய ஊடகத்துறையில் பெண்களின் உரிமைகள், குரல்கள் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்காகச் செயற்பட்டு வரும் South Asian Women in Media – Sri Lanka (SAWM) அமைப்பும், Sri Lanka Muslim Media Forum (SLMMF) அமைப்பும் இணைந்து இப்பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தன.
கனடாவின் உள்ளூர் முன்னெடுப்புகளுக்கான நிதியத்தின் (Canada Fund for Local Initiatives – CFLI) ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் 'Digital Equity SL: Responsible AI – Empowering Women, Media and Civil Society' திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பயிற்சி இடம்பெற்றது.
காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சியின்போது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அண்மைக்காலமாக உருவாகிவரும் புதிய மாற்றங்கள், நவீன பயன்பாடுகள், பயனுள்ள நுட்பங்கள் மற்றும் அன்றாடச் செயற்பாடுகள், தொழில்சார் நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தும் வழிமுறைகள் தொடர்பில் வளவாளரால் விளக்கமளிக்கப்பட்டன.
குறிப்பாக, ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, தகவல்களைத் திரட்டுதல், செய்தி மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்குதல், தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காணுதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அத்துடன், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புணர்வு, நெறிமுறைகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் இத்தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பெண்கள் ஊடகவியலாளர்களின் தொழில்சார் முன்னேற்றம், திறன் மேம்பாடு, ஊடகச் சுதந்திரம், பாலின சமத்துவம், ஊடக உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சியில் பெண்கள், சிவில் சமூகத்தினரின் பங்களிப்பை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் சமமான வாய்ப்புகளுடன் பங்கேற்பதற்குத் தேவையான டிஜிட்டல் அறிவையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்துவதற்கு இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

No comments