கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் ‘கனகர் கிராமம்’ நூலுக்குச் சிறந்த நூலுக்கான விருது
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் ‘கனகர் கிராமம்’ நூலுக்குச் சிறந்த நூலுக்கான விருது
செல்வி வினாயகமூர்த்தி
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வருடந்தோறும் நடத்தப்படும் ‘கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா – 2026’ நேற்று (28) மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் இம்முறை 51 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவர்களில் 11 பேர் நூல்களுக்கான சிறந்த எழுத்தாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, மட்டக்களப்பைச் சேர்ந்த கலை, இலக்கியம், சமூகம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பன்முக ஆளுமை கொண்ட தப்பியப்பா கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘கனகர் கிராமம்’ நூல் சுயநாவல் துறையில் சிறந்த படைப்பாகத் தெரிவுசெய்யப்பட்டு, சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றுக்கொண்டது.
தப்பியப்பா கோபாலகிருஷ்ணனின் ஆறாவது நூலான ‘கனகர் கிராமம்’ சிறந்த படைப்பாகத் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களின் ஆக்கத்திறனை ஊக்குவித்து, அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கும் விழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.


No comments