*அரச பல்கலைக்கழகங்களில் நாளை (30) பாரிய வேலைநிறுத்தம்: FUTA அறிவிப்பு!*
*அரச பல்கலைக்கழகங்களில் நாளை (30) பாரிய வேலைநிறுத்தம்: FUTA அறிவிப்பு!*
இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (30) வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (27) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்ற சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழகத் துறையைப் பாதிக்கும் நீண்டகால மற்றும் அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளமையும், பல்கலைக்கழகக் கல்விசார் சமூகத்தினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிலையான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையுமே இந்த வேலைநிறுத்தத்திற்கான பிரதான காரணங்கள் என FUTA சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இதுவரை எவ்வித திருப்திகரமான தீர்வுகளும் எட்டப்படவில்லை என குறித்த கூட்டமைப்பு கடும் விசனம் வெளியிட்டுள்ளது.
எனவே, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் இந்தப் பிரச்சினைகளின் அவசரத் தன்மையை அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கும் நோக்கிலுமே இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக, FUTA அமைப்புடன் இணைந்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களும் முழுமையாகப் பங்கேற்கவுள்ளதால், நாளைய தினம் அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments