திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம்.!!!!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (29) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போது நிலவும் எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக மழைவீழ்ச்சியினால் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, வெருகல், சேருவில, மூதூர், கிண்ணியா மற்றும் கந்தளாய் ஆகிய வெள்ள அபாயப் பகுதிகளில் மழைநீர் முறையாக வழிந்தோடுவதற்கான வடிகால் கட்டமைப்புகளை முறையாகப் பராமரித்தல் மற்றும் புனரமைத்தல் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் வெள்ள அனர்த்த அபாயம் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கான திட்டங்களை தயாரித்து முன்வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கான நீர் விநியோகம் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பயிர்ச்செய்கைக்கு முன்னர் பயிர் காப்புறுதி செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு மாத்திரமே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. சுகுணதாஸ்,பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments