அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு அஷ்ரப் தாஹிர் எம்.பி. தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
– நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று நிந்தவூர் அஸ்ரப் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் அல்ஹிக்மா பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஷ்ரப் தாஹிர் எம்.பி. அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் எனக் குறிப்பிட்டதுடன், மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு இத்தகைய கல்வி ஆதரவு முயற்சிகள் மிக அவசியமானவை எனத் தெரிவித்தார்.
அல்ஹிக்மா ஃபவுண்டேஷன், மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இன்று அகில இலங்கை அளவில் சமூக சேவைகளை முன்னெடுத்து வருகிறது. டாக்டர் அப்பாஸ் இபாதுல்லா அவர்களால் நிறுவப்பட்ட இவ்வமைப்பு, தர்மம், கல்வி மற்றும் சமூக நலன்களை ஒருங்கிணைத்து, மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதை தனது பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் இங்கு பேசிய அவர்கள், ஏழை மற்றும் பலவீனமுள்ள குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார சேவைகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் வறியோருக்கான நல உதவிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்குதல் போன்ற பல்வேறு சமூகப் பணிகள் எங்கள் அமைப்பினால் இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று, கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “Education for All” திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று இந்த ரூ. 6,250 பெறுமதியான கல்விப் பொதியை, 500 மாணவர்களுக்கு ரூ. 3,125,000 ரூபாய் செலவில் வழங்குகிறோம். ஒவ்வொரு கல்விப் பொதியிலும், புத்தகப்பை, பயிற்சி புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள், ரப்பர்கள், பென்சில் சீவிகள், டிபன் பெட்டி, குடிநீர் போத்தல், வண்ண கலர் பெட்டி மற்றும் குடை ஆகியவை அடங்கியுள்ளன.
அல்-ஹிக்மா பவுண்டேஷன், வறுமை நீக்கம், சமூக பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், சமுதாயத்தில் சமத்துவமான வளர்ச்சியை உருவாக்கும் நோக்குடன் தனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.சமூக நலன் மற்றும் கல்வி முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி, தொடர்ச்சியாக பல்வேறு மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் இத்தகைய திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






No comments