Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட சமூக பொலிஸ் கட்டமைப்பு மீளாய்வு




அம்பாறை மாவட்ட சமூக பொலிஸ் கட்டமைப்பு மீளாய்வு அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை,சவளக்கடை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது,உள்ளிட்ட பகுதிகளில் சமூக பொலிஸ் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான விசேட நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை (18) பெரிய நீலாவணை பகுதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றப்பட்டது. இதில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இந்த நிகழ்வில் கல்முனை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் கல்முனை தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. டபிள்யூ.ஏ.என். பிரதீப் குமார உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன் சமூக பிரதிநிதிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் சமூக பொலிஸ் ஆலோசனை சபைகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறிப்பாக கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் சமூக பொலிஸ் ஆலோசனை சபைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்.அந்தந்தப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம நிலதாரி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல, பொதுமக்கள் பொலிஸாருக்கு பணங்களை வழங்கி வேலைகளை முடித்துக் கொள்ளுகின்ற கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும். பொலிஸ் நிலையம் என்பது வியாபாரம் செய்யும் இடம் கிடையாது. அது பொதுமக்களுக்கு பாதுகாப்பையும் சிவில் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் திணைக்களமாகும். சாதாரணமாக கூலி வேலை செய்பவரிடமிருந்தும் கோடீஸ்வரர்களிடமிருந்தும் கிடைக்கும் வரிப்பணத்தில் நாம் சம்பளத்தை பெறுகின்றோம். இனவாதம், மதவாதம் போன்ற வேறுபாடுகள் தலைதூங்குவதற்கு இடமளிக்கக் கூடாது. எல்லோரும் இலங்கை வாழ் மக்கள் என்று ரீதியில் நாம் பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம். எனவே பொலிஸாரோடு இணைந்து பணியாற்றும் நீங்கள் சமூகத்திற்காக விரும்பி வந்து பணியாற்றுகின்றீர்கள். உங்களது சேவையை நாம் பெரிதும் மதிக்கிறேன் என்றும் தெரிவித்தார். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துதல் மற்றும் கிராம மட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்வின் வரவேற்புரையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் நிகழ்த்தினார். நிகழ்வின் இறுதியில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொதுமக்கள் பொலிஸ் பாதுகாப்பு குழுவின் தலைவர், செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர்களினால் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

No comments