Column Left

Vettri

Breaking News

தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை போராட்டம்!




 தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக "இதொரு சட்டவிரோதமான விகாரை" என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும் , விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுப்பது என்றும் ,கடந்த வியாழக்கிழமை   வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


No comments