மட்டு. அம்பாறை மாவட்டங்களில் பத்து நாட்களின் பின் சீரான மின்சாரம் ! மக்கள் மகிழ்ச்சி!!
மட்டு. அம்பாறை மாவட்டங்களில் பத்து நாட்களின் பின் சீரான மின்சாரம் ! மக்கள் மகிழ்ச்சி!!
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டு .அம்பாறை மாவட்டங்களில் பேரிடரால் தடைப்பட்டிருந்த மின்சாரம் பத்து நாட்களின் பின்னர் நேற்று(6) மாலை 6 மணியளவில்
வழமைக்கு திரும்பியது.
அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த ஒன்பது நாட்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டிருந்தனர்.
அதுவரை சுழற்சி முறையில் நாளொன்றுக்கு ஒருமணிநேரம் முறை மாற்று அடிப்படையில் மின்சாரம் சில பகுதிகளுக்கு வழங்கப் பட்டு வந்தது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக குறித்த கோபுரம் முற்றாக சேதமடைந்திருந்தது.
இதனால் அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கான மின்சாரம் கடந்த 27 ஆம் திகதியிலிருந்து ஒன்பது நாட்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரன்தம்பே, மஹியங்கனையில் இருந்த 132kV உயர் மின்னழுத்த இணைப்பின், 15ஆவது கோபுரமே இவ் அனர்த்தத்தில் சுருண்டு வீழ்ந்தது.
அதனையடுத்து இலங்கை மின்சார சபை, சிரமங்களுக்கு மத்தியில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சேதமடைந்த மின் பரிமாற்ற பாதையை சரிசெய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை சீர்செய்யும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்திருந்தது.
சேதமடைந்த கோபுரத்திற்குப் பதிலாக புதிய கோபுரம் நிருமாணிக்கப்பட்டு தடைபட்டிருந்த மின்சாரம் மீண்டும் கிடைத்ததில் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்காக மக்கள் ஜனாதிபதிக்கும் இலங்கை மின்சார சபையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
No comments