நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைப்பு!!
நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் தற்போது மேலும் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்கால மழை முன்னறிவிப்புகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சதுவ மற்றும் ராஜாங்கனை, தெதுரு ஓயா, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர மற்றும் வெஹெரகல, அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரம் ஆகியவற்றின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக தற்போது நீர் திறந்து விடப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இவ்வாறு விடுவிக்கப்படும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சூரியபண்டார குறிப்பிட்டார்.
தற்போதைய முன்னறிவிப்புகளின்படி எதிர்காலத்தில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், இந்நிலைமைகளைக் கண்காணிப்பதற்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
No comments