ஆண்டியர் சந்தியில் சட்டமுரனான சுற்றுச் சந்தி - பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
ஆண்டியர் சந்தியில் சட்டமுரனான சுற்றுச் சந்தி - பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
பாறுக் ஷிஹான்
ஆண்டியர் சந்தியில் சட்டமுரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரினால் தொடரப்பட்ட வழக்கு செவ்வாயக்கிழமை (16) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன் போது நகர அபிவிருத்திச் அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி 'அபிவிருத்திப் பிரதேசமாக' வர்த்தமானியின் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகள் யாவும் குறித்த பிரதேசம் அமையப் பெற்றுள்ள உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்நிலையில் மேற்படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் பல்வேறு தொழிநுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்டமுரணாக மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி தொடரப்பட்டுள்ள குறித்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப்பணிப்பாளர் பிரதம பொறியியலாளர் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரான சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட சமர்ப்பணத்தைக் கேட்டறிந்த மன்றானது எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆந் திகதி பிரதிவாதிகள் மன்றில் தோன்றுவதற்கான அறிவித்தலை அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக புரிந்துணர்வோடும் இன ஐக்கியத்துடனும் வாழும் இனக்குழுக்களுக்கு மத்தியில்
சம்மாந்துறை ஆண்டியர் சந்தியை மையப்படுத்தி பகையுணர்வையும் வன்மத்தையும் தூண்டும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments