2000 ரூபாவினால் பிடிக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரி
பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேக நபர் ரூபா 2000 க்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து இன்று(4) இச்சந்தேக நபர் கைதானார்.
சந்தேக நபரை கைது செய்ய போதைப்பொருள் கொள்வனவு செய்பவர் போன்று மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் 70 மில்லி கிராம் போதைப்பொருளை பேரம் பேசி ரூபா 2000 ஐ கைமாற்றும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதானவர் 29 வயது மதிக்கத்தக்க குவைத் சிட்டி நிந்தவூர் 9 பிரிவில் வசிக்கும் சந்தேக நபர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து 1250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ரூபா 20 ஆயிரம் பணம், 2 கைத்தொலைபேசிகள்,போதைப் பொருளை அளவீடு செய்வதற்கான இலத்திரனியல் தராசு உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சோதனை நடவடிக்கையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கைதான சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இது தவிர நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (3) அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, பகுதியைச் சேர்ந்த 4 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments