வாணி விழாவில் செட்டிபாளையம் சிவன் ஆலயம் 29 புலமையாளர்களுக்கு கௌரவம் !!
( வி.ரி.சகாதேவராஜா)
வாணி விழாவில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற 29 செட்டிபாளைய மாணவர்களை செட்டிபாளையம் சிவன் ஆலயம் கௌரவித்தது.
செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 29 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது ஆலயத் தலைவர் மு.பாலகிருஷ்ணனின் வழிகாட்டலில் ஆலய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நவராத்திரி தினத்தில் கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதிக்குரிய வாணிவிழாவன்று இச்சாதனையாளர் கௌரவிப்பு இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரணவரூப சர்மாவின் ஆசியுரையுடன் இந்நிகழ்வானது ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து திருவருள் சங்கத்தின் ஆலோசகர் க. துரைராஜாவினால் தலைமையுரை இடம்பெற்றது. தொடர்ந்து இந்நிகழ்வினை செயலாளர் ம. புவிதரன் ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்நிகழ்வில் செட்டிபாளையம் மகா வித்தியாலய பிரதி அதிபர்களான திருமதி. சுதந்தி ஜெயக்குமார் மற்றும் ஆழகையா கிருபானந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், சிவன் ஆலய திருவருள் ஆண்கள் மற்றும் பெண்கள் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அடியார்கள், நலன் விரும்பிகள்,
எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தரம் ஐந்திற்கு கல்வி கற்பிக்கும் திருமதி யோ.நடேசினி ஆசிரியையும் கௌரவிக்கப்பட்டார்.
இச்சாதனையாளர் கௌரவிப்பிற்கான நினைவுச் சின்னம் மற்றும் பரிசீல்கள் முழுவதற்குமான அனுசரணையினை ஆலய தலைவர் திரு. மு. பாலகிருஷ்ணனது குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
ஆலயம் ஆரம்பித்த நாளிலிருந்து ஆன்மீகப் பணிகளுக்கு அப்பால் கல்வி மற்றும் சமூகப் பணிகளையும் இரு கண்கள் போல் நினைந்து ஆலய ஸ்தாபகர் சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜி காட்டிய வழியில் அவ்வப்போது பதவியிலிருந்த திருவருள் சங்க நிருவாகத்தினர் இடையறாது
சுமார் 85 வருடங்களாக இவ் உன்னத கைங்கரியத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments