தந்தையின் மறைவுச்செய்தியோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார் துனித் வெல்லாலகே!!
கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார்.
அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் திடீர் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நேற்றைய (18) போட்டியில் அதிரடியாக துடுப்பாடிய மொஹமட் நபியும் அவர்களில் அடங்கியுள்ளார்.
துனித்தும் அவரது தந்தையும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டு, துனித்தின் குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.
“அன்பான தந்தையின் மறைவுக்கு துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தைரியமாக இருங்கள் சகோதரரே,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பங்களாதேஷ் அணியின் டி-20 தலைவர் லிட்டன் தாஸூம் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை இட்டு, துனித்தின் குடும்பத்திற்கு பலம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
“துனித் வெல்லாலகே, தைரியமாக இருங்கள். உங்கள் தந்தை சுரங்க வெல்லாலகே 54 வயதில் காலமானார் என்பதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர்.
கடவுள் அவருக்கு நித்திய அமைதியையும், இந்த கடினமான நேரத்தில் துனித்தின் குடும்பத்திற்கு பலத்தையும் வழங்குவாராக” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, பங்களாதேஷ் வீரர்களான தஸ்கின் அஹமட், தவ்ஹித் ரிதோய் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments