Column Left

Vettri

Breaking News

மருதமுனையில் "நினைவின் நிகழ்வுகள்" ; ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்கேற்பு




( பாறுக் ஷிஹான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃபின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் மற்றும்  அண்மையில் வபாத்தான அன் -நஹ்ழா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் மூத்த உலமாவுமான மர்ஹூம் ஏ.அபூஉபைதா மெளலவி ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஏற்பாடு செய்த "நினைவின் நிகழ்வுகள்" ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் ஒருங்கிணைப்பில் அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  (16) நடைபெற்றது.

அரபுக் கல்லூரியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வரவேற்பு உரையினை கல்லூரியின் செயலாளரும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க் அஹமது அன்சார் பழீல் மௌலானா  நிகழ்த்தியதோடு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அபூ உபைதா மெளலவி பற்றியும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஆற்றல், ஆளுமை குறித்தும் இங்கு உரையாற்றினார்.

மருதமுனை மத்திய குழுவின் தலைவர் எம்.எச்.எம்.தாஜூத்தீன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மாணவர்களால் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதோடு விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது. கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ் ஷெய்க். றிஸ்வி ஹாபிஸ் அவர்களினால் அபூ உபைதா மௌலவி அவர்களின் சேவையை பாராட்டி சிறப்பு ஹஸீதாவும் இங்கு பாடப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித் , கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் றஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ் உமர் அலி, எம்.எஸ்.ஹாரிஸ் நவாஸ், முஸ்தபா சரீப், உள்ளிட்டவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், நஹ்லா அரபுக் கல்லூரியின் நிர்வாகத்தினர், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், ஹாபிழ்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளை சிரேஸ்ட அறிவிப்பாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளருமான பஸீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கினார்.

No comments