Column Left

Vettri

Breaking News

மருதானை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்!!




 கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி நிலைபேறான, நவீன மற்றும் தரப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து கட்டமைப்புடன் கூடிய அழகான வாழ்க்கை முறையை அடைவதற்காக, ரயில் நிலையங்களில் பொது வசதிகளை மேம்படுத்தல், ரயில் நிலையங்களை வசதியான மற்றும் பாதுகாப்பான இடங்களாக மாற்றும் நோக்கத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், தேசிய புத்திஜீவிகள் அமைப்பு அரச-தனியார் பங்களிப்பின் கீழ் நாட்டில் நூறு ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து மருதானை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ரயில் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதுடன் கட்டுப்பாட்டு அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டார்.

ரயில் திணைக்களத்திற்கே உரித்தான 'ருஹுனு குமாரி' என்ற புதிய சிங்கள கணினி எழுத்துருவும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக கருதப்படும் மருதானை ரயில் நிலையம், கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இந்த நவீனமயமாக்கல் பணிகள், இதன் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட உள்ளன.

No comments