Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் மனித-யானை மோதல்களை நிர்வகிக்க மாவட்ட குழு உருவாக்கம்!!




பாறுக் ஷிஹான்

மனித-யானை மோதல்களை நிர்வகிக்கும் நோக்கமாக, அம்பாறை மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் புதன்கிழமை (23) ஏ.ஐ. விக்ரம மாநாட்டு மண்டபத்தில், அம்பாறை மாவட்ட மனித-யானை மோதல் நிர்வாக குழு ஒன்று நிறுவப்பட்டது.

கட்டுப்பாடு இன்றி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், யானைகளின் இயற்கை பாதைகள் மற்றும் குடியிருப்புகள் அழிவடைதல், மேலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பயனற்ற முயற்சிகள் என்பவையே, நாடெங்கும் பரவியுள்ள இந்த தீவிர மனித-யானை மோதல்களின் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

இந்த நெருக்கடியை நிர்வகிக்க விரைவான, திறமையான மற்றும் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் இன்றியமையாதவை. இந்த நிலையில், அறிவியல் அடிப்படையிலான நுண்ணறிவு மற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் கூடிய குறித்த குழுவே உருவாக்கப்பட்டது. இக்குழு மனிதர்களின் உயிர், சொத்துகள், விவசாயம் மற்றும் யானைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் பணியாற்றவுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் யானை மனிதர் மோதல்களால் ரூபா மில்லியன் 89 நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதையும், மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாண துணை இயக்குநர் பிரசன்ன எல். விமலதாச (வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்) அவர்கள், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து விரிவாக விளக்கினார்.

இதில், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் சார்பில் வந்த பிரதிநிதிகள் தங்களது பகுதிகளிலுள்ள யானை-மனித மோதல்களைப் பகிர்ந்து, பல பரிந்துரைகளை முன்வைத்தனர். குறிப்பாக அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று, நிந்தவூர் பகுதியில் யானை-மனித மோதல்களைப் பற்றியும், நீடித்து நிலைக்கும் பரிந்துரையாக Bio-fence Barrier ( Sustainable Plan) Lemon- Palmira Planting & Livelihood Development Plan பிரதித் தவிசாளர் பாறுக் நஜித்  முன்மொழியப்பட்டு அது அதிகாரிகளால் வரவேற்கப்பட்டது.


இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபையின்  தவிசாளர்  எம்.ஏ ராசிக் , நிந்தவூர் பிரதேச சபையின்  தவிசாளர் ஏ. அஸ்பர் ,  இறக்காமம்  பிரதேச சபையின் உதவிசாளர்  எம்.ஐ முஸ்மி  மற்றும்  அட்டாளைச்சேனை பிரதேச சபையின்  பிரதித் தவிசாளர் எம்.பாறுக் நஜித் உட்பட அனைத்து பிரதேச செயலக அதிகாரிகள் , உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள்,  பிரதித் தலைவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், வன பாதுகாப்பு அதிகாரிகள் ,பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்புப் படையினர்  சம்பந்தப்பட்ட அனைத்து அரச அதிகாரிகளும் கலந்து  சிறப்பித்தனர்.









No comments