எலும்புக்கூடுகளை AI ஊடாக உருமாற்றினால் சட்ட நடவடிக்கை!!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவு (Al )புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அதை மீறிப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவுப் படங்கள் சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் பரப்பப்படுகின்றன.
இப்படியான பிழையான படங்கள் பகிரப்படுவது குற்றவியல் விசாரணைகளுக்கு இடையூறு செய்வதோடு, உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்படலாம் எனவும், இந்தப் புதைகுழியைத் தவறான விதத்துக்குக் கொண்டுசெல்ல ஓர் உக்தியாக இதனைக் கையாளுகின்றனரா எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, குறித்த போலியான செயற்கை நுண்ணறிவுப் படங்களைப் பகிர்பவர்கள் மீது, நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ஆகவே, சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செயற்கை நுண்ணறிவுப் படங்களைப் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்
No comments