மின்சார சபையின் உண்மையான நிதி நிலைமை விபரங்களை எதிர்வரும் வாரம் ஆவணங்களுடன் வெளிப்படுத்துவேன் - உதய கம்மன்பில
மின்சார சபையின் மோசடி மற்றும் முறைகேடுகள் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மின்சார சபையின் உண்மையான நிதி நிலைமை விபரங்களை எதிர்வரும் வாரம் ஆவணங்களுடன் வெளிப்படுத்துவேன் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) சிவில் அமைப்புக்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தவறான தரவுகள் மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்புக்காக மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முன்வைத்த தரவுகளில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எதிர்வரும் ஆறு மாதகாலத்துக்கு மழை வீழ்ச்சி கிடைக்காது என்று மின்சார சபை முன்வைத்துள்ள விடயம் முற்றிலும் தவறானது. மின்சார சபையின் மோசடி மற்றும் முறைகேடுகள் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மின்சார சபையின் உண்மையபான நிதி நிலைமை விபரங்களை எதிர்வரும் வாரம் ஆவணங்களுடன் வெளிப்படுத்துவேன்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதாக குறிப்பிட்டார்.ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காக மின்கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
சுயாதீன இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை குறைத்து மின்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நிதியமைச்சுக்கும், வலுசக்தி அமைச்சுக்கும் வழங்கும் வகையில் புதிய சட்டவரைவினை அரசாங்கம் தயாரித்துள்ளது. இந்த சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் மின்கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலையீடு இரத்துச் செய்யப்படும் என்றார்.
No comments