Vettri

Breaking News

சுவாமி விபுலானந்தர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம புகழாரம்




 (வி.ரி.சகாதேவராஜா)

 கல்வித் துறையில் மாத்திரமல்ல ஆன்மீகத் துறையிலும் துறைபோன ஒருவராக சுவாமி விபுலானந்தர் அவர்கள் திகழ்ந்திருக்கின்றார் . அவர்  அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம காரைதீவில் உரையாற்றுகையில் புகழாரம் சூட்டினார்.

முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின்  துறவற தின நூற்றாண்டு விழாவையொட்டிய இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு  விழா கடந்த  ஞாயிற்றுக்கிழமை காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய.அநிருத்தனன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
உலகில் முதல் தமிழ்ப் பேராசிரியரான அவர் பல மொழிகளிலே பாண்டித்தியம் பெற்று  பல துறைகளில் பாண்டித்தியம் பெற்ற  ஒருவராக இருந்தார்.

 மிக முக்கியமாக இசைத் துறையிலே அவர் ஆற்றிய சேவையும் இசை துறையில் அவர் உருவாக்கிய யாழ் நூலும் உலகப் பிரசித்தி பெற்றவை.


 உண்மையாக சொல்லப் போனால் அவர் பிரதேசத்துக்கு மாத்திரம்  இல்லாமல்
பொதுவான ஒரு தேசிய உரிமையாக ஒரு தேசிய பொக்கிஷமாக கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.


அவரது தந்தை ஒரு கிராம உத்தியோகத்தர்.அரச சேவையாளர். அதேவேளை சுவாமிகள் தாய்நாட்டிற்காக இராணுவ வீரராகவும் சேவையாற்றி இருந்தார்.

அவர் இப் பூவுலகில் வாழ்ந்த 55 வருடத்தில் இந்து சமயத்திற்கும் தமிழுக்கும் மண்ணுக்கும்  செய்த சேவை அளப்பரியது.

பௌதீக துறையில் பட்டதாரி அதேவேளை தமிழ்ப் பண்டிதர்.
கல்வித் துறையில் ஆன்மீக துறையில் துறை போன ஒரு
பரமகுருவானவர்.
அவர் துறவி. அவரது
ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் .

ஏனெனில், அவர் சாதிமத பிரதேசம்  கடந்தவர் . அவர் ஒரு தேசிய உரிமையாக  தேசிய பொக்கிஷமாக கொண்டாடப்பட வேண்டிய உன்னத புருஷராவார்.
என்றார்.
அவரது சிங்கள உரையை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தமிழில் மொழிபெயர்த்தார்.

No comments