நாட்டிலுள்ள அனைத்து பாலங்கள் உடைந்து விழுந்தாலும் அதனை திருத்துவதற்காக ஒருபோதும் மீண்டும் பணத்தை அச்சிட முடியாது - பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!!
நாட்டிலுள்ள அனைத்து பாலங்கள் உடைந்து விழுந்தாலும் அதனை திருத்துவதற்காக ஒருபோதும் மீண்டும் பணத்தை அச்சிட முடியாது. பணம் அச்சிடுவதை மத்திய வங்கி தடை செய்துள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் இன்னும் கத்தி நுனியிலேயே உள்ளதால் தவறியேனும் ஒரு அடியை எடுத்து வைத்தாலும் படுகாயம் ஏற்படும் அபாயம் இருக்கிறதென்றும் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடு இவ்வாறான நிலையில் காணப்படும் போது பாராளுமன்றத்தில் அனைவரும் டயானாவை பற்றி பேசுவது விந்தையாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பான பொறுப்பு இந்த பாராளுமன்றத்துக்கு உள்ளதால் அனைவரும் சிறந்த உரைக்காக இந்த சபையை பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை உருவாக்கியதும் கடன் தொடர்பான உடன்படிக்கைகளை மாற்றுவதாக தெரிவிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கே என தெரிவித்த அவர், கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவது அவசியம் என்றும் அதற்கான வாக்குறுதியில் கையொப்பமி இடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதி கட்டளைச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாலங்கள் உடைகின்றன, மண் சரிவு ஏற்படுகின்றன, அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன இவைகள் இதுவரை அரசாங்கத்துக்கு தெரியவில்லையா? என அரசாங்கத்தை தூற்றுகின்றனர்.
கடந்த அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டு அவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தன. தற்போது அவ்வாறு செய்ய முடியாது. மத்திய வங்கி பணம் அச்சிடுவதை தடை செய்துள்ளது அதனால் நாட்டிலுள்ள அத்தனை பாலங்களும் உடைந்து விழுந்தாலும் பணம் அச்சிடப்பட மாட்டாது. மகாவலி கங்கையை வடக்குக்கு திருப்புவதும் கடன் மூலமே என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments