Vettri

Breaking News

தடுப்பூசி ஏற்றப்பட்ட 4 மாத குழந்தை இரு நாட்களின் பின் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்




 மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட 4 மாத குழந்தை இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிகம, நவகல பிரதேசத்தைச் சேர்ந்த 4 மாத குழந்தைக்கு கடந்த 2ஆம் வெலிப்பிட்டிய சுகாதார காரியாலய அதிகாரிகளினால் குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர், குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக 5ஆம் திகதி இமதுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைய குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்றப்பட்ட தடுப்பூசி விஷம் அடைந்தமையாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக வெலிப்பிட்டிய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மேலும், தடுப்பூசி ஏற்றப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னரே குழந்தை உயிரிழந்துள்ளது. தடுப்பூசி விஷமடைந்திருந்தால் குறுகிய காலப்பகுதிக்குள் மரணம் இடம்பெற்று இருக்க வேண்டும். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைகளுக்காக பிறகே மரணத்துக்கான காரணத்தை உறுதியாக கூறலாம் என சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி, பன்சலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் குறித்த சத்திர சிகிச்சைக்காக கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் கடந்த மாதம் 27ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கமைவாக 28ஆம் திகதி அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டு சில நாட்களுக்கு பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் சகோதரர்கள் கூறுகையில், வைத்தியசாலையின் வைத்தியர்களது கவனயீனம் காரணமாக இந்த மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.




இதேவேளை கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ரஞ்சித் தர்மகீர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில்,

குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சத்திர சிகிச்சையின் போது தவறுகள் ஏற்படலாம். இருப்பினும் மருந்து தட்டுப்பாடு அல்லது ஒட்சிசன்களின் அளவில் எந்தவித குறைபாடுகளும் இருக்கவில்லை. எவ்வாறாயினும் இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். கடந்த 4 வருடங்களுக்குள் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவே முதல் தடவை என்றார்.

No comments