பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் மீட்பு!!
பாறுக் ஷிஹான்
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ஏதாவது குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக்குழுக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா என மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் 07 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தனது தந்தை இவ்வாறு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததை மகன் அறிந்து அத்துப்பாக்கியை உத்தியோக பூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியை கடிதம் ஊடாக அணுகியுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் குறித்த பிரிவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் உள்ள பொலிஸ் குழுவினர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீட்டை குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஊடாக அறிவித்த நபருடன் வருகை தந்து அவ்வாயுதத்தை எடுத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாயுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேககிக்கப்படும் நபர் விமான ரிக்கட் மற்றும் விசா வழங்குதல் தொடர்பான உப முகவராக செயற்பட்டுள்ளதுடன் சுமார் 7க்கும் மேற்பட்ட மொழியறிவு கொண்டவராக தன்னை இனங்காட்டி சமூகத்தில் நடமாடி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
No comments