Vettri

Breaking News

மத ஸ்தலங்களுக்குள் நுழைந்து கொள்ளையிட்டு வந்த தம்பதி உள்ளிட்ட மூவர் கைது...




 உண்டியல் பணம், நகைகள், பெறுமதிமிக்க பித்தளை பொருட்களை பதுளையின் பகுதிகளிலும் உள்ள ஆலயங்கள், விகாரைகளில் உள்நுழைந்து கொள்ளையடித்து வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ண தலைமையிலான குழுவினர் நேற்று (06) அதிகாலை வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கையில், சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த ஸ்கூட்டர் ரக உந்துருளி ஒன்றையும் மற்றுமொரு உந்துருளியையும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது ஸ்கூட்டர் ரக உந்துருளியில் வைக்கப்பட்டிருந்த பை ஒன்றில், ஆலயங்களில் உள்ள பித்தளை பொருட்கள் இருந்துள்ளன.




இதனையடுத்து குறித்த உந்துருளியை சோதனைக்குட்படுத்தியதன் அடிப்படையில் பணம், பித்தளை பொருட்கள், தங்க நகைகள் அடகு வைத்ததற்கான பற்றுச் சீட்டுகள், கத்தி உட்பட மேலும் சில ஆயுதங்கள், 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 2 உந்துருளிகள் குறித்த மூன்று சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

இந்த மூவர் மீதும் சந்தேகம் கொண்ட பசறை பொலிஸார், இவர்களை பசறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது, ஹொப்டன் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றையும் பசறை பெல்காத்தன்ன பகுதியில் உள்ள விகாரை ஒன்றையும் உடைத்து இப்பொருட்களை கொள்ளையடித்ததாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பெல்காத்தன்ன விகாரையின் தேரரினால் பெல்காத்தன்ன பகுதியில் அமைந்துள்ள விகாரை நேற்று முன்தினம் (05) இரவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

உந்துருளியில் பயணித்த 25 வயதுடைய ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், 29, 20 வயதுகளையுடைய ஹாலிஎல, கனுபெலெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு ஆண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த இருவரும் கணவன், மனைவி எனவும் கனுபெலெல்ல பகுதியைச் சேர்ந்தவர் இவர்களது நண்பர் எனவும் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் பதுளை பகுதிகளில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments