அக்கரைப்பற்று மாநகர சபையால் துரிதப்படுத்தப்பட்ட வடிகான் தூய்மையாக்கல் முன்ஆயத்த நடவடிக்கை
அக்கரைப்பற்று மாநகர சபையால் துரிதப்படுத்தப்பட்ட வடிகான் தூய்மையாக்கல் முன்ஆயத்த நடவடிக்கை
பாறுக் ஷிஹான்
நடப்பு ஆண்டுக்கான மாரிகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், மழை வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளையும் வடிகான்களையும் துரிதமாகத் துப்புரவு செய்து கொடுக்குமாறு மாநகர சபையின் கௌரவ முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டைப் போன்றே இவ்வாண்டும் முறையான முன்ஆயத்தத் திட்டங்களை வகுத்துச் செயற்படுமாறு மாநகரசபையின் அனர்த்த மற்றும் அபிவிருத்திக் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக இத் தூய்மையாக்கல் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, காதிரியா வடக்கு வட்டாரத்தில் (KT-14) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மதீனா உம்மா வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர் சீராக வழிந்தோடும் வகையில் வடிகான்களைத் துப்புரவு செய்யும் பணிகள் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றன.மதீனா உம்மா வீதிப் பணிகளைத் தொடர்ந்து, இ வாரம் முதல் மாநகர சபைக்குட்பட்ட ஏனைய வட்டாரங்களிலும் இத் துரித வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன்படி பதுர் வட்டாரம்,புதுப்பள்ளி வட்டாரம்,மேற்கு வட்டாரம்,காதிரியா தெற்கு வட்டாரம் (KT-13),நகர் பள்ளி வட்டாரம்,உள்ளிட்ட பகுதிகளில் வீதியோர வடிகான்களில் அடைபட்டுள்ள கழிவுகள், மண்கள் அகற்றப்பட்டு நீர் வழிந்தோடக் கூடிய வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இச் சிரமதானப் பணிகளை அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம். நுஃமான், எம்.என்.எம். றியால், ஏ.எஸ். பாசித், ஏ.எச். அனீப் மற்றும் ஏ.கே.ஏ. பாஹிம் ஆகியோர் நேரடியாகக் களத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தும் வருகின்றனர்.
மாநகர சபையின் இத் துரித நடவடிக்கையினால் எதிர்வரும் மாரிகாலத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் பெருமளவில் தவிர்க்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
--

No comments