Column Left

Vettri

Breaking News

உளநலப் பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கல் தொடர்பான பயிற்சி செயலமர்வு!




 உளநலப் பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கல் தொடர்பான பயிற்சி செயலமர்வு!


நூருல் ஹுதா உமர்

உளநலப் பிரச்சினைகளை உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, அவற்றுக்கான சரியான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குவது தொடர்பான விசேட பயிற்சி செயலமர்வு வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிராந்திய உளநலப் பிரிவினால் இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சமூக மட்டத்திலும் பாடசாலை மாணவர்களிடையேயும் அதிகரித்து வரும் உளவியல் சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே இனம் கண்டு கையாள்வதற்கான தொழில்நுட்ப அறிவை வழங்கும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உளவளதுணை உத்தியோகத்தர்கள், கல்முனை பிராந்திய பாடசாலைகளின் உளவளதுணை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில், பிராந்திய உளநலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.அருந்திரன், உளநல சிரேஷ்ட வைத்தியர் டொக்டர் எம்.ஜே.நௌபல் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் வீ.சிந்துஜன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

உளநலப் பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் கையாளுதல், உளவளதுணையின் தெளிவற்ற பகுதிகள் மற்றும் உளவியல் முதலுதவி ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. களமட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் திறன் விருத்தி ஊடாக ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப இச்செயலமர்வு பெரும் உதவியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us