புத்தளம் நகர பிதாவின் தாக்குதலால் காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு கல்லெறிந்ததால் அதிரடி கைது
புத்தளம் நகர பிதாவின் தாக்குதலால் காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு கல்லெறிந்ததால் அதிரடி கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் நகர பிதா மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் – தில்லையடி பகுதியைச் சேர்ந்த உதார புஷ்பிக (வயது 29) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில் வெள்ளிக்கிழமை ( 27) மாலை 5.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன், தில்லையடி வீதியோரத்தில் அப்பிள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்விடத்திலிருந்து விலகுமாறு புத்தளம் நகர சபை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு அறிவித்திருந்தனர். அதற்கமைய, தான் அமைத்திருந்த தற்காலிக வியாபார நிலையத்தை அகற்றிய அவர், வீதியோரத்தில் மேசையொன்றை வைத்து அப்பிள் வியாபாரத்தைத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (27) மாலை அவ்விடத்திற்குச் சென்ற புத்தளம் மேயர் ரின்சாத் அஹமட், குறித்த மேசையையும் உடனடியாக அகற்றுமாறு பணித்துள்ளார். அப்போது, அருகிலேயே இன்னும் பலர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை ஏன் அகற்றவில்லை எனத் தான் கேள்வி எழுப்பியதாகவும், இதன்போதே கோபமடைந்த நகர பிதா தன்னைத் தாக்கியதாகவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த குறித்த இளைஞன், நகர பிதா வருகை தந்த வாகனத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ வாகனத்தின் மீது நபரொருவர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து புத்தளம் மேயர் ரின்சாத் அஹமட் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டிற்கமைய துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞனை வைத்தியசாலையிலேயே வைத்துக் கைது செய்துள்ளனர். இதற்கமைய, அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments