ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் உளநலத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியவர்களாக இருக்க வேண்டும்
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் உளநலத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியவர்களாக இருக்க வேண்டும் : பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஸா
நூருல் ஹுதா உமர்
ஒரு மாணவர் பிரச்சினையுடன் வருகின்றபோது அவரை முன்கூட்டியே தீர்ப்பிடாமல், குற்றம் சுமத்தாமல், அவரது நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு வழிகாட்ட வேண்டும். இந்தப் பண்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் அவசியமானதாகும். இவ்வாறான அணுகுமுறைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் வளர்த்துக்கொண்டால் பாடசாலைகளிலும் வீடுகளிலும் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும் என கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஸா தெரிவித்தார்.
கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைஷால் தலைமையில், பாடசாலை வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் சிரேஷ்ட ஆசிரியை ஏ.எம். ஐனூன் நௌசாத் அவர்களின் நெறிப்படுத்தலில் புதிதாக அமைக்கப்பட்ட C2 (Counselling and Career Guidance) மையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் றியாஸா மேலும் தெரிவிக்கையில்,
கல்வித்துறையில் தற்போது பல்வேறு மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக, பாடசாலைகளில் ஏற்கனவே இயங்கி வந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவுகள் C2 மையங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இம்மையங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அவற்றில் இருக்க வேண்டிய கட்டமைப்புகள் என்ன என்பது தொடர்பான ஆலோசனைக் கையேட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த அடிப்படையில், கல்முனை கல்வி வலயத்தில் முன்னோடியாக அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இவ்வாறானதொரு C2 மையம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, அதற்குத் தேவையான ஏனைய கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. இதற்காகப் பொறுப்பாசிரியை ஏ.எம். ஐனூன் நௌசாத் அவர்களை விசேடமாகப் பாராட்ட வேண்டும். அவரது கணவர் சிரேஷ்ட உளவளத்துறை ஆலோசகராக இருப்பதன் காரணமாகவும், அவருக்குக் கிடைத்த ஒத்துழைப்பு இந்தப் பணியில் பங்களித்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி மறுசீரமைப்புகள் கலைத்திட்ட மாற்றங்களுடன் மாத்திரம் நின்றுவிடாமல், அதனுடன் தொடர்புடைய ஏனைய கல்விக் கட்டமைப்புகள் மற்றும் சேவைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், பல்வேறு புதிய பெயர்களிலும் வடிவங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் சில கட்டமைப்புகளின் அடிப்படை உள்ளடக்கங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விடயங்களுடன் ஒத்ததாகவே காணப்படுகின்றன.
C2 மையம் என்பது ஆலோசனைக்குப் பொறுப்பான ஓர் ஆசிரியருக்கு மாத்திரம் உரித்தான பிரிவாகக் கருதப்படக்கூடாது. ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் உளநலத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் ஒழுக்கவியலிலும் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கான உளவளத்துணையாளராகச் செயற்பட வேண்டிய பொறுப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய Z Generation மற்றும் Alpha Generation மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சவால்கள் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, அவர்களது உளநலத் தேவைகளை அடையாளம் கண்டு, பொருத்தமான முறையில் கையாள்வதற்கான அறிவும் திறனும் ஆசிரியர்களிடம் இருப்பது அவசியமாகும்.
இந்தப் பொறுப்பு ஆசிரியர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பெற்றோர்களிடமும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமது பிள்ளைகள் வீட்டில் என்ன செய்கின்றார்கள், வீட்டுக்கு வெளியே எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கும், அவர்களைக் கண்காணித்து வழிநடத்துவதற்கும் பெற்றோர்கள் உரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காகப் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.
மேலும், ஒரு சிறந்த ஆலோசகருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்று மற்றவர் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கும் திறனாகும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களின் கருத்துகளையும் பிரச்சினைகளையும் மிகுந்த கவனத்துடன் செவிமடுத்ததன் மூலம் இதற்கான சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளார்கள்.
இதனை உளவளத்துறையில் 'Active Listening' எனக் குறிப்பிடுகின்றோம். மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது ஏனைய ஆசிரியர்கள் தமது பிரச்சினைகளைக் கூறும்போது அவர்களின் கருத்துகளை முழுமையாகக் கேட்பதற்கான நேரத்தையும் பொறுமையையும் நாம் ஒதுக்க வேண்டும்.
அதேபோன்று, 'Empathy' எனப்படும் மற்றவர்களின் நிலையில் இருந்து அவர்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ளும் பண்பும் அவசியமாகும். ஒருவரை எமது சொந்த மதிப்பீடுகள் மற்றும் பார்வைகளின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானிக்காமல், அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை அவருடைய நிலையில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெற்றோருக்கான வழிகாட்டல் செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இவை C2 மையத்தின் செயற்பாடுகளில் பொறுப்பாசிரியை கொண்டுள்ள ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.
எதிர்காலத்திலும் இம்மையம் மேலும் பல்வேறு முன்னேற்றங்களுடன் செயற்பட்டு, கல்முனை கல்வி வலயத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இதன் ஊடாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். ரியாஸாவுக்கு பாடசாலைச் சமூகம் சார்பில் கௌரவம் வழங்கப்பட்டது.


No comments