பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுதலை.
பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுதலை.
திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு – சமூக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவும் தடை..!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், இன்று ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சமூக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் அமைத்து புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (17) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்காக கடந்த 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்காக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை.
இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்கான தனது விளக்கத்தை தேரர் தனிப்பட்ட முறையில் முன்வைத்திருந்தார்.
எனினும், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேரர் சார்பில் சட்டத்தரணி மஞ்சுள சேனநாயக்க முன்னிலையானார்.
அவரே தேரர் சார்பில் பிணை கோரிக்கையையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
இதனையடுத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய நிலையில், அவரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், தேரர் சமூக ஊடகங்களுக்கு கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், வழக்கின் அடுத்த விசாரணைக்காக 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments