Column Left

Vettri

Breaking News

சமூக வலைத்தளங்களில் வதந்திகள், போலியான காணொளிகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு தவிசாளர் கோரிக்கை




 சமூக வலைத்தளங்களில் வதந்திகள், போலியான காணொளிகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு தவிசாளர் கோரிக்கை  


பாறுக் ஷிஹான்


நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள், நிறுவன நிலைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளைப் பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை எச்சரித்துள்ளது.



இது குறித்து நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரினால் வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


 சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுத் தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புதல், தவறான கருத்துக்களை வெளியிடுதல், வீண் வதந்திகளை உருவாக்குதல், காணொளிகள் மற்றும் நேரலைகள் (Live videos) மூலம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.


இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் இனிவரும் காலங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், சபையின் நற்பெயருக்கும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய்யான அல்லது அவதூறான தகவல்களைப் பரப்புவோர் தொடர்பில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


 பொதுமக்களின் தேவைகள், சபையினால் வழங்கப்படும் சேவைகளில் காணப்படும் குறைபாடுகள், முறைப்பாடுகள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைச் சபை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பின்வரும் உத்தியோகபூர்வ வழிகளினூடாகவோ முன்வைக்க முடியும்:


தொலைபேசி இலக்கம்: 0672250035,மின்னஞ்சல்: psnintavur@gmail.com,முகநூல் பக்கம்: Pradeshiya Sabha - Nintavur (Inbox),நேரடித் தொடர்பு: கௌரவ தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் பொதுமக்களின் நியாயமான விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும் சபை எப்போதும் மதிப்பளிக்கும். அதேவேளை, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புதல் மற்றும் சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.


சபையின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments

Subscribe Us