தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் காலமானார்!
தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க காலமானார்.
கண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 85ஆவது வயதில் நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் நீண்டகாலமாக தீவிரமாக ஈடுபட்டு வந்த சிரேஷ்ட அரசியல் செயற்பாட்டாளரான லால் விஜேநாயக்கவிகன் மறைவு அரசியல் மற்றும் சட்டத்துறை வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி தர்மராஜா கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் லால் விஜேநாயக்க கல்வி கற்றார்.
லால் விஜேநாயக்க, லங்கா சம சமாஜக் கட்சி'யின் (LSSP) அரசியல் பீட (Politburo) உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு, ஐக்கிய இடதுசாரி முன்னணியை (United Left Front) உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை அண்மையில் எதிர்த்த அவர், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராகவும் தீவிரமாகப் பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments