அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
திருத்தப்பட்ட அஸ்வெசும பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகளை நவம்பர் 11 வரை சமர்ப்பிக்கலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேன்முறையீடுகள் அந்தந்த பிரதேச செயலகங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஊடகமொன்றுக்கு அளித்த ஒரு பிரத்யேக நேர்காணலில், அந்த சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதற்கான கடைசித் திகதி நவம்பர் 11 ஆகும்.
சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டுக் குழுக்களுக்கு பிரதேச செயலகங்களே தலைமை தாங்குவதால், மேன்முறையீடுகள் அந்தந்த பிரதேச செயலகங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
திருத்தப்பட்ட பட்டியலின்படி, சுமார் 991,800 பேர் அஸ்வெசும பயன்களுக்குத் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலும் 265,315 நபர்களும் தொடர்ந்து இந்த உதவித்தொகையைப் பெறுவார்கள்
நவம்பர் 27 அன்று திருத்தப்பட்ட பயனாளிகள் பட்டியலை வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்ப்பதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பூர்வாங்க மதிப்பீடுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 700,000 பேரை உள்ளடக்கிய மற்றொரு பட்டியல் அனுமதிக்காகக் காத்திருக்கிறது
.அனுமதி கிடைத்தவுடன், மிகவும் ஏழ்மையான மற்றும் ஏழ்மையான பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்களும் வெளியிடப்படும்.
திருத்தத்தைத் தொடர்ந்து தங்களது அஸ்வெசும நலன்களை இழந்த தனிநபர்கள் குறித்து, சமுர்த்தி திணைக்களத்தின் மூலம் ஒரு அதிகாரமளித்தல் திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது
அத்திட்டத்தின் கீழ் உதவிக்காக அடையாளம் காணப்பட்ட தனிநபர்களைப் பரிந்துரைக்க, நலன்புரி நன்மைகள் சபை சமுர்த்தி திணைக்களத்துடன் ஒரு தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.
மிகவும் ஏழ்மையான மற்றும் ஏழ்மையான பிரிவுகளில் உள்ளவர்களுடன் மேலதிகமாக, பாதிக்கப்படக்கூடிய மற்றும் இடைநிலைப் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் இந்த அதிகாரமளித்தல் முயற்சிகளை விரிவுபடுத்த சபையும் உத்தேசித்துள்ளது” அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

No comments