மவுண்ட் ரோயல் சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா, முன்பள்ளி பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா 2026!
மவுண்ட் ரோயல் சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா, முன்பள்ளி பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா 2026!
நூருல் ஹுதா உமர்
தெஹிவளை மவுண்ட் ரோயல் சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா, முன்பள்ளி பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா – 2026, “மாற்றத்தின் அலைகள்” (Waves of Change) என்ற தொனிப்பொருளில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை அதிபர் எஸ்.எஸ். முஹிதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கல்விச் சாதனைகள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெற்ற வெற்றிகள் மற்றும் கலைத்திறன்கள் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டன.
முதலாவது அமர்வில் சுற்றுச்சூழல் வேதியியல் மற்றும் கழிவு முகாமைத்துவத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம், சிவில் மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பபசரி அருந்ததி கொலியபண்டார பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மற்றுமொரு அமர்வில் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டமும், விவசாயத் துறையில் சிறப்புப் பட்டமும் பெற்றவரும், கனடாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் குவைத்துக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான யூ.எல். முஹம்மட் ஜவ்ஹர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் சம்சுதீன் ஜிப்ரி விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக முன்பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. தமது ஆரம்பக் கல்விப் பயணத்தின் முக்கிய மைல்கல்லை எட்டிய சிறார்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம், தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகளும் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வருடாந்த கலைவிழாவில் மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள், இன்னிசைக் குழுப் பாடல்கள், நாடகங்கள் மற்றும் பல்வேறு படைப்பாற்றல் மிக்க மேடை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
“மாற்றத்தின் அலைகள்” என்ற தொனிப்பொருளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இக்கலை நிகழ்ச்சிகள், கல்வியின் ஊடாக எதிர்காலத் தலைமுறையினரிடம் ஏற்படுத்தப்படும் மாற்றம், தன்னம்பிக்கை, மீளெழுச்சி மற்றும் ஆளுமை விருத்தி ஆகியவற்றை எடுத்தியம்புவதாக அமைந்தன.
இந்நிகழ்வின் வெற்றிகரமான ஏற்பாடுகளுக்குப் பாடசாலை நிர்வாகமும் ஆசிரியர் குழுவினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தனர்.
குறிப்பாக, பாடசாலை அதிபர் எஸ்.எஸ். முஹீதீன், முகாமையாளர் நசீர் ஹுசைன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸைனப் நவாஸ், பிரிவு தலைவர்களான முஃபீதா அஸியான், ஷப்னம் சம்சுதீன் மற்றும் ஸகியா அன்வர் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக அமைந்தது. நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளையும் ஸகியா அன்வர் பொறுப்பேற்று முன்னெடுத்திருந்தார்.
மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், கலைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் வளர்த்து, எதிர்காலத்தில் சமூகத்திற்குப் பயனுள்ள தலைவர்களாக உருவாக்கும் மவுண்ட் ரோயல் சர்வதேசப் பாடசாலையின் கல்விப் பயணத்தில் இவ்விழா மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

No comments