கடற்படையினரால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் கலென்பிந்துனுவெவ பகுதியில் திறந்து வைப்பு!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கடற்படையின் சமூகப் பணி திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள படிகாரமடுவ மகா வித்தியாலய வளாகத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை (2026 ஒக்டோபர் 16) குறித்த பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள படிகார மடுவ மகா வித்தியாலய மாணவர்களின் அன்றாட சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மீள் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் முறையாகச் செயற்படாமையினால், அப்பாடசாலை மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினை நிலவி வந்தது.
அதற்கமைய, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, சுகாதார அமைச்சின் தலைமையில், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்புடன், திரு லக்சிறி அபேசேகரவின் நிதிப் பங்களிப்பில் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், படிகாரமடுவ மகா வித்தியாலய மாணவர்களின் சுத்தமான குடிநீர்த் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள முடிந்துள்ளது
மேலும், இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதன் மூலம், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் இதுவரை 1,163 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.
No comments