டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மனிதனை மையமாகக் கொண்ட திறன் அபிவிருத்தியும் அவசியம்!!!!
இலங்கையை 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் தேசிய இலட்சியத்தை அடைவதற்கு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியைப் போலவே மனிதனை மையமாகக் கொண்ட திறன்கள் அபிவிருத்தியும் அவசியம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) பொன்விழாவையொட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 44ஆவது தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் (NITC 2026) உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், அரசாங்கத்தின் பிரதான டிஜிட்டல்மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், அரசாங்கக் கொடுப்பனவுகளை டிஜிட்டல்மயமாக்கும் GovPay தளத்தின் ஊடாக 2025 டிசம்பர் மாதமளவில் 215க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், எதிர்காலத்திலும் இத்தளத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கல்வித் துறையில் டிஜிட்டல் இடைவெளியை இல்லாதொழிப்பதற்காக, டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடித்தளம் பாடசாலை வகுப்பறையிலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது. அங்கு தொழில்நுட்பச் சாதனங்களை வழங்குவதற்கு மேலதிகமாக, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், டிஜிட்டல் எழுத்தறிவையும் விமர்சனச் சிந்தனையையும் வளர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அவசரப் பேரழிவுச் சந்தர்ப்பங்களில் தொடர்பாடல் நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, 'அமெச்சூர் வானொலி அவசரத் தொடர்பாடல் வலையமைப்பை' (Amateur Radio Emergency Communication Network) நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவை அரச மற்றும் தனியார் துறைகளில் ஒருங்கிணைக்கும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மனித நலன் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கப்பட வேண்டும்.
ஜப்பானின் Society 5.0 தொலைநோக்கு, சிங்கப்பூரின் SkillsFuture வேலைத்திட்டம் ஆகியவற்றைப் போன்று, தொழில்நுட்பம் என்பது வெறும் இன்னொரு கருவி மட்டுமல்ல என்றும், நாட்டின் அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுமே இறுதி இலக்கு என்றும் பிரதமர் தெரிவித்தார்.
No comments