“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்”; நாளை நூல் வெளியீட்டு விழா.
(செல்வி வினாயகமூர்த்தி)
அக்கரைப்பற்று பனங்காடு கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு விழா 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை காலை 9.00 மணிக்கு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெறவுள்ளது.
விழாக்குழுவின் தலைவரும், ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் செயலாளருமான அ. பிரதீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலம் தொடர்பான வரலாறு, பண்பாட்டு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, நூல் வெளியீட்டுரையும் அறிமுக உரையும், நூல் வெளியீடு, நூல் நயவுரை, ஏற்புரை உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதனையடுத்து, தேசிய பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன், நிறைவில் நன்றியுரையும் இடம்பெறவுள்ளது.
வீரமுனையின் தொன்மையான வரலாற்றையும், சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணியையும் ஆவணப்படுத்தும் முக்கியமான ஆய்வு நூலாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமய மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
No comments