சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு; ஏகமனதாகத் தீர்மானம் தனி உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்துக்கு ரூ.1.5 இலட்சம்; ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள வட்டாரத்துக்கு தலா ரூ.1 இலட்சம்!!!!
(தில்சாத் பர்வீஸ்)
சம்மாந்துறை பிரதேச சபையின் சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ், தனியொரு உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள வட்டாரத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வில், சபையின் நிதி நிலைமை மற்றும் உறுப்பினர்களின் வட்டார அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சபையின் நிதி நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், பிரதேச சபையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதாந்தச் சம்பளக் கொடுப்பனவுகளுக்காகச் சுமார் 60 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், போதிய வருமானம் இல்லாததால் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முத்திரைத் தீர்வை வருமானமாகச் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அபராதப் பணமாக மாதாந்தம் சுமார் 10 முதல் 12 இலட்சம் ரூபாய் வரை கிடைப்பதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கவுள்ள நிதியைப் பயன்படுத்தி சபையின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், உறுப்பினர்களின் வட்டார அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களுக்கான நிதியைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில், வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் சபைக்குத் தெரிவான உறுப்பினர்கள் என வேறுபாடின்றி அனைவருக்கும் நியாயமான முறையில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, தனியொரு உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள வட்டாரங்களில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒவ்வொரு உறுப்பினரும் தமக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிகள் மற்றும் தேவையான பொருட்கள் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்களைச் சுத்தம் செய்யும் பணிகள் நேர அட்டவணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மழைக்காலத்தை முன்னிட்டு வடிகான்களைச் சீரமைத்து, நீர் தேங்கும் நிலைமைகளைக் குறைப்பதற்காக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சபையின் நிதிப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதுடன், வட்டாரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பது தொடர்பிலும் அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
No comments