Column Left

Vettri

Breaking News

SRI LANKA PEN CLUB இன் ஆறாவது தேசிய மாநாடு நாளை சாய்ந்தமருதில்!!!!




(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான Sri Lanka Pen Club இன் ஆறாவது தேசிய மாநாடு நாளை (17) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும். "ஆரோக்கியமான குடும்பம்; ஆற்றலுள்ள பெண்ணின் ஆதாரம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாட்டிற்கு அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் இலக்கிய வித்தகர், கலாபூஷணம் சம்மாந்துறை மஷூறா ஜே.பி தலைமை வகிக்கிறார். பிரதம அதிதிகளாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.என். மைமூனா, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கௌரவப்படுத்துகின்றனர். காலை அமர்வில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. அறுபத்தைந்து முஸ்லிம் பெண்களின் கவிதைகளடங்கிய "கடத்தி" கவிதைத் தொகுதி மீதான உரையை கவிஞர் றவூப் ஹஸீர் நிகழ்த்துகிறார். பென்கிளப் காலாண்டிதழான அவரி சஞ்சிகையில் வெளியான இருபத்தைந்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, "அவரி சிறுகதைகள்" தொகுதி வெளியிடப்படுகிறது. அவரி சிறுகதைகள் மீதான உரையை கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் நிகழ்த்துகிறார். அங்கத்தவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம் பெறுகிறது. மாலை அமர்வில் அமைப்பின் அறுபத்து மூன்று அங்கத்தவர்கள் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பங்களித்தமைக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். வழமைபோல நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் பெண்கள் ஒன்று கூடும் இந்நிகழ்வு களைகட்டுமென்பதி்ல் சந்தேகமி்ல்லை.எனினும் அமைப்பிற்கு வெளியே வழமைபோல அழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பென் கிளப் 2026 க்கான ஆறாவது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடத்திய போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில், நோன்பு காலத்தில் நடத்தப்பட்ட ரய்யானிய வசந்தம் வினாவிடைப்போட்டியில் முதலிடத்தை மீராவோடை றஹீமா இன்ஸார், இரண்டாமிடத்தை கிண்ணியா பாயிஸா அலி, மூன்றாமிடத்தை மதவாச்சி சேஹூ முகம்மது பெனாஸிரா ஆகியோரும், வருடம் முழுவதும் ஊடகங்களுக்கு அதிகமான ஆக்கங்களை எழுதியவர்களுக்காக நடத்திய "வெல்லப் போவது யார்?" போட்டியில் முதலிடத்தை மதவாச்சி சேஹூ முகம்மது பெனாஸிரா, இரண்டாமிடத்தை அக்கரைப்பற்று முபீதா அமீன், மூன்றாமிடத்தை புல்மோட்டை சஞ்ஸீதா ஆகியோரும் வருடம் முழுவதற்குமான "புதையல்" வினாவிடைப் போட்டியில் முதலிடத்தை கலேவல லரீபா பதுர்தீன், இரண்டாமிடத்தை காத்தான்குடி பௌஸியா றிஸான் ஆகிய வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நாளை நடைபெறும் ஆறாவது மாநாட்டில் இடம்பெறுமென, SLPC அமைப்பின் தலைவி கலாபூஷணம் சம்மாந்துறை மஷூறா தெரிவித்தார்.

No comments

Subscribe Us