Column Left

Vettri

Breaking News

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம் பழைய மீன்களைப் புதியதாகக் காட்டி நுகர்வோரை ஏமாற்றும் வியாபாரிகள்!!!




(பாறுக் ஷிஹான்) சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மேற்குறித்த செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருவதுடன் குறித்த மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீன்களின் செதில்கள், வாய் மற்றும் செவுள்களுக்குள் (Gills) நுண் மணல் அல்லது மணல் தூள்களைப் புகுத்துவதன் மூலம் மீனின் நிகர எடை செயற்கையாக அதிகமாக்கப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர் குறைந்த அளவு மீனுக்கு அதிக பணம் செலுத்தி ஏமாற்றப்படுகின்றனர்.அத்துடன் நாள்பட்ட மீன்களின் வழுவழுப்புத் தன்மையையும், அவை அழுகும் போது ஏற்படும் வெளிப்புற மாற்றங்களையும் மறைத்து, புதிய மீன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இத்தகைய ஏமாற்று வேலைகளில் சில வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சந்தைகளில் மீன் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என்றும், இவ்வாறான மணல் கலப்பட அல்லது ஏமாற்று வியாபாரங்களில் ஈடுபடும் வர்த்தகர்கள் பற்றி அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்திற்கோ அல்லது நுகர்வோர் அதிகாரசபைக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் புதிய மீன்களின் செவுள்கள் அடர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். செவுள்களுக்குள் மணலோ, சேறோ அல்லது கறை படிந்த திரவங்களோ அடைபட்டிருக்கக் கூடாது.மீனின் கண்கள் தெளிவாக, பிரகாசமாக மற்றும் வெளிப்புறமாக உப்பிக் காணப்பட வேண்டும். கண்கள் குழிவிழுந்தோ, மங்கியோ அல்லது இரத்தக் கறைகளுடன் காணப்பட்டால் அது பழைய மீனாகும்.மீனின் உடற்பகுதியை விரலால் அழுத்தினால் அது உடனே மீண்டும் பழைய நிலைக்கு மீள வேண்டும். அழுத்தும் போது குழி விழுந்து, சதைப்பகுதி மென்மையாக இருந்தால் அது கெட்டுப்போன மீன் ஆகும்.புதிய மீனில் கடலோரத்தின் இயல்பான உவர் வாசனை மட்டுமே வீச வேண்டும். துர்நாற்றமோ அல்லது மீனைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் அபாயகரமான 'ஃபார்மலின்' (Formalin) போன்ற இரசாயன வாசனையோ வீசக்கூடாது என உரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

No comments

Subscribe Us