Column Left

Vettri

Breaking News

NGO சட்டமூலம், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை குறித்து கல்முனையில் ஆராய்வு!!




(நூருல் ஹுதா உமர்) அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை குறித்து ஆராயும் நோக்கில் கல்முனை ஆசாத் பிளாசாவில் சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் மற்றும் உலமாக்கள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. வைத்தியர் மற்றும் சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் உதவி சுகாதார ஊழியர்களின் கலாச்சார ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டமை ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தை பகடைக்காயாக பயன்படுத்தி ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் ஏற்படுத்திய தாக்கங்களைப் போன்று, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இவ்விடயங்களினூடாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் தொடர்பில் காணப்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இச்சட்ட ஏற்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அதேவேளை, முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது சமய மற்றும் கலாச்சார அடையாளத்தின் அடிப்படையில் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வு அவசியம் எனவும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களும் விரிவாக முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்காக ஊழலற்ற, பொறுப்புணர்வுள்ள சமூகத் தலைமைகள் உருவாக்கப்பட்டு, எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களில் சமூகத்திற்கு தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் கலந்துரையாடல் நிறைவடைந்தது.

No comments

Subscribe Us