தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மூதூர் மக்களுக்கு நிவாரணம்..!
(சேனையூர் நிருபர்)
தித்வா புயல் காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை முழுமையாக இழந்த 9 குடும்பங்களுக்கு, புதிய வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட நிதியுதவியாக தலா 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வியாழக்கிழமை 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரினால் இந்த காசோலைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டன.
இதனுடன், இரண்டு புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
தித்வா புயலினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு, தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாகவே, ஒன்பது பயனாளிகளுக்கும் தலா 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூதூர் உதவிப் பிரதேச செயலாளர் ரொசானா ரெஸீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.கே.எம். சப்ரான், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நிவாரண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments