மலையகம் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண மக்கள் நீட்டிய நேசக்கரத்தை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் : நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் எஸ். யோகராஜா!!
(நூருல் ஹுதா உமர்)
மலையகப் பிரதேசம் டித்வா புயலில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட காலகட்டத்தில் கிழக்கு மாகாண மக்களும், ஊடகங்களும் வழங்கிய மனிதாபிமான உதவி, ஆறுதல் மற்றும் ஒத்துழைப்பை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அந்த அனர்த்தக் காலத்தில் உதவிக்கரம் நீட்டிய கிழக்கு மாகாண மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நன்றி என நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ். யோகராஜா உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு பூர்த்தி விழா மற்றும் விசேட பாராட்டு விழா நுவரெலியா லேக் வியூ கார்டன் திறந்த வெளியரங்கில் (Lake View Garden) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் நுவரெலியா வருகை ஒரு சாதாரண ஊடக நிகழ்வாக மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்திற்கும் மலையகத்திற்கும் இடையிலான உறவுப் பாலத்தை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சந்திப்பாக அமையும். கிழக்கு மாகாணம் இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா மையமாக மட்டுமன்றி, நாட்டுக்கு பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளை, தலைவர்களை உருவாக்கிய மண்ணாகும் என்றார்.
கவிஞர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை உருவாக்கியுள்ள கிழக்கு மாகாணத்திலிருந்து ஊடகவியலாளர்கள் நுவரெலியாவிற்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சந்திப்புகள் எதிர்காலத்தில் இரு பிராந்திய மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்காலத்திலும் நுவரெலியா மாநகர சபையில் நடத்துவதற்கு தன்னால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஊடகத்துறை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஜனநாயகத்தின் வலிமைக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், நுவரெலியாவில் இவ்வாறான நிகழ்வை நடத்தத் தேர்வு செய்தமைக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான நட்பும் நல்லுறவும் மேலும் வலுப்பெற வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
No comments