Column Left

Vettri

Breaking News

செம்மணி புதைகுழி தொடர்பில் உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது!




(அபு அலா) செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பல ஆண்டுகளாக தங்களது அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து வரும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதென இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டம் பிரமுகர் குமார் ஜெயகுமரன் MBA, BSc (Hons) தெரிவித்தார். இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (26) திருகோணமலையில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இதை அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் மனித உயிர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போன்ற குடும்பங்களின் உரிமைகள் மற்றும் உண்மையை அறியும் உரிமை தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினையாக பார்க்க வேண்டுமே தவிர வேறு கோணத்தில் பார்க்கக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார். செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும், மீட்கப்பட்ட மனித எச்சங்களை DNA பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும். அத்துடன் காணாமல் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளுடன் அவை ஒப்பிடப்பட்டு அக்குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி அதனை விசாரணை செய்கின்றபோது அதில் எவ்வித அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடு இல்லாத வகையில் இடம்பெறவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த விசாரணையை நெருக்கமாகக் கண்காணித்து, தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். செம்மணி தொடர்பான உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது. உண்மை வெளிவர வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

No comments

Subscribe Us